4 August 2026
Back to Articles
Tamil

ஒழுக்கச் சீரழிவுகளும் சமூகப் பாதுகாப்பும்: ஸூரா நூரின் பத்தொன்பதாம் ஆயத் தரும் கருத்துக்கள்

Published: Jul 23, 2026

ஒழுக்கச் சீரழிவுகளும் சமூகப் பாதுகாப்பும்: ஸூரா நூரின் பத்தொன்பதாம் ஆயத் தரும் கருத்துக்கள்

அஷ்ஷெய்க் கலாநிதி அரபாத் கரீம் (நளீமி)

சிரேஷ்ட விரிவுரையாளர்

ஜாமிஆ நளீமிய்யா

தற்காலத்தில் மனித சமூகம் முன்னெப்போதும் கண்டிராத ஒரு ஒழுக்க ரீதியான சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரு சமூகத்தின் நிலைத்தன்மையை தீர்மானிப்பது அதன் பொருளாதார வளமோ அல்லது இராணுவ பலமோ அல்ல; மாறாக அச்சமூகம் எத்தகைய ஒழுக்க விழுமியங்களை முதுகெலும்பாகக் கொண்டிருக்கிறது என்பதே முக்கியம். ஒழுக்கம் என்பது தனிமனித நடத்தையோடு முடிந்துவிடுவதல்ல; அது ஒரு சமூகக் கட்டமைப்பின் அடிப்படை அலகாகும். இன்றைய நவீன உலகில் 'தனிமனித சுதந்திரம்' மற்றும் 'மனித உரிமைகள்' என்ற போர்வையில் ஒழுக்க வரம்புகள் மாற்றி எழுதப்படுவது ஒரு பாரதூரமான சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், புனித அல்குர்ஆனின் சூரா நூர் 19-வது வசனம் காலங்களைக் கடந்த ஒரு எச்சரிக்கையாகவும் வழிகாட்டியாகவும் அமைகிறது. "நிச்சயமாக எவர் ஈமான் கொண்டவர்களிடையே மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு" என்கிறது அவ்வசனம். தனிமனித ஒழுக்கத்தைச் சிதைப்பதன் மூலம் ஒரு சமூகத்தையே உள்ளிருந்து பலவீனப்படுத்தும் சூழ்ச்சிகளை முறியடிக்க, இந்த வசனத்தின் ஆழமான சமூக-உளவியல் பின்னணியை நாம் ஆராய வேண்டியுள்ளது.

வரலாற்றுப் பின்னணி: 'ஹதீஸுல் இஃப்க்'

இஸ்லாமிய வரலாற்றில் ஒழுக்கத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலை 'ஹதீஸுல் இஃப்க்' என்ற சம்பவம் பிரதிபலிக்கிறது.

ஒரு சமூகத்தை இராணுவ ரீதியாக எதிர்கொள்வதை விட, அதன் ஆளுமைகளின் நற்பெயரைச் சிதைப்பது எவ்வளவு கொடியது என்பதை வரலாறு இங்கே பதிவு செய்கிறது.

# எதிரிகளின் உத்தி மாற்றம்

நபி (ஸல்) அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் இராணுவ ரீதியாக பத்ர், உஹுத் மற்றும் ஹந்தக் யுத்தங்களில் ஈமானிய பலத்துடன் எதிரிகளை எதிர்கொண்டனர். ஆயுத முனையில் முஸ்லிம்களை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல், மதீனாவிலிருந்த யூதக் குழுக்களுடன் இணைந்து ஒரு புதிய 'தகவல் போரை' கட்டவிழ்த்துவிட்டான். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு அபாண்டம் ஒன்றை எதிரிகள் உருவாக்கினார்கள். அது ஒரு சமூகத்தின் தார்மீக நம்பிக்கையைச் சிதைக்க நடத்தப்பட்ட உளவியல் போர். ஒரு நபரின் கற்பு மற்றும் ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், அந்தத் தலைமையின் கண்ணியத்தை உடைப்பதே அவர்களின் இலக்காக இருந்தது.

இந்தச் சதித்திட்டம் மதீனா சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பாரதூரமானது. நம்பிக்கையாளர்களிடையே அவநம்பிக்கை விதைக்கப்பட்டு, ஒட்டுமொத்தச் சமூகமும் ஒருவித ஸ்தம்பித நிலையை அடைந்தது. ஒழுக்கம் மீதான தாக்குதல் என்பது ஒரு சமூகத்தின் நிம்மதியையும் ஒற்றுமையையும் சிதைக்கும் மிக மோசமான ஆயுதம் என்பதை இச்சம்பவம் நிரூபித்தது.

'பாஹிஷா' - ஒரு விரிவான சமூக-ஆன்மீக வரைவிலக்கணம்

குர்ஆன் குறிப்பிடும் 'பாஹிஷா' என்ற சொல் வெறும் உடல் ரீதியான உறவை மட்டும் குறிப்பதல்ல. இது விரிவான அர்த்தங்களைக் கொண்ட ஒரு கலைச்சொல்லாகும்.

சூரா அல்-அஃராஃப் (7:33) வசனத்தில் இறைவன் "வெளிப்படையான மற்றும் மறைவான பாஹிஷாக்களை" தடை செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறான். இது செயல் வடிவத்தில் இருக்கும் அநாகரிகங்கள் மட்டுமின்றி, உள்ளத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் தீய எண்ணங்களையும் ஆபாசச் சிந்தனைகளையும் உள்ளடக்கியது.

சூரா அல்-பகரா (2:268) ஒரு நுணுக்கமான உண்மையை விளக்குகிறது. ஷைத்தான் மனிதர்களை வறுமையைக் கொண்டு அச்சுறுத்தி, அவர்களை 'பாஹிஷா'வின் பக்கம் தூண்டுகிறான். அதாவது, பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தின் ஒழுக்கத்தை விலைக்கு வாங்கும் உத்தியை ஷைத்தான் கையாள்கிறான்.

சூரா அல்-அன்கபூத் (45) வசனத்தின் படி, 'தொழுகை பாஹிஷாவுக்கு எதிரான ஒரு தற்காப்பு அரணாகும். ஒரு மனிதன் ஒழுக்கச் சீரழிவுகளில் சிக்காமல் இருக்க, அவனது ஆன்மீகக் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

இன்று 'பாஹிஷா' என்பது ஒரு பெரும் சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. ஆபாச ஊடகங்கள் இன்று ஒரு பாடத்திட்டம் போல இளைஞர்களிடையே திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. ஒழுக்கமற்ற ஆடை, பார்வையின் அநாகரிகம் மற்றும் பேச்சு வழக்குகளில் கலந்திருக்கும் கீழ்த்தரமான வார்த்தைகள் என 'பாஹிஷா' பல பரிமாணங்களை எடுத்துள்ளது.

தீயவற்றை விரும்புதல் மற்றும் பரப்புதல்: ஒரு உளவியல் பகுப்பாய்வு

சூரா நூர் 19-வது வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள "யுஹிப்பூன்" (விரும்புகிறார்கள்) என்ற சொல் மிக முக்கியமானது. இங்கே ஒரு தீமையைச் செய்பவர்களை விட, அத்தீமை சமூகத்தில் பரவ வேண்டும் என்று விரும்புபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில், ஒழுக்கச் சீரழிவுகள் என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அவை சர்வதேச அளவில் ஒரு மறைமுக 'அஜெண்டாவாக' முன்னெடுக்கப்படுகின்றன. மனித உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரம் என்ற பெயரில், காலங்காலமாகப் போற்றப்பட்ட குடும்ப விழுமியங்கள் சிதைக்கப்படுகின்றன. LGBTQ மற்றும் ஆபாசத் தொழில் நிறுவனங்கள் (Porn Industries) சமூகத்தின் ஒழுக்க வரம்புகளை அழிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளன.

ஒரு சமூகத்தின் ஒரு சாரார் தீமை பரவுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், அல்லது அதை ஒரு நாகரிக வளர்ச்சியாகக் கருதி ஆதரிப்பதும் அச்சமூகத்தின் வீழ்ச்சிக்கான தொடக்கமாகும். வெறும் மனதால் விரும்புவதே தண்டனைக்குரியது எனில், அதற்காக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டு உழைப்பவர்களின் பாரதூரத்தை நாம் உணர வேண்டும்.

இறைவனின் எச்சரிக்கை: "அல்லாஹ் அறிகிறான், நீங்கள் அறியமாட்டீர்கள்"

ஒழுக்கச் சீரழிவுகளைப் பரப்புபவர்களுக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் "அதாபுன் அலீம்" (நோவினை தரும் தண்டனை) இருப்பதாக எச்சரிக்கிறான்.

• உலகளாவிய தண்டனை: இது வெறும் சட்ட ரீதியான தண்டனை மட்டுமல்ல. மன உளைச்சல், குடும்பச் சிதைவு, நிம்மதியற்ற வாழ்க்கை மற்றும் சமூகம் எதிர்கொள்ளும் கலாச்சார வீழ்ச்சி ஆகியவையே மிகப்பெரும் உலகத் தண்டனைகளாகும். உடனடி இன்பத்திற்காக அலைபவர்கள், அதன் நீண்டகால சமூகப் பொருளாதாரப் பாதிப்புகளை உணர்வதில்லை.

• மறுமைத் தண்டனை: ஒரு சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளைத் தீமையின் பால் தள்ளிய குற்றத்திற்காக, இறைவனிடம் கடுமையான விசாரணை காத்திருக்கிறது.

• இறை ஞானம்: "அல்லாஹ் அறிகிறான், நீங்கள் அறியமாட்டீர்கள்" என்ற வசனத்தின் இறுதிப் பகுதி, மனித அறிவின் எல்லையைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு சிறிய ஒழுக்க மீறல் எவ்வாறு ஒட்டுமொத்தச் சமூகக் கட்டமைப்பையும் எதிர்காலத்தில் சிதைக்கும் என்பதை இறைவன் மட்டுமே முழுமையாக அறிவான்.

தீர்வுகளும் படிப்பினைகளும்: தற்காப்புக்கான மூன்று தூண்கள்

இந்த ஒழுக்க நெருக்கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள மூன்று தளங்களில் நாம் செயல்பட வேண்டும்:

1. மூலோபாய விழிப்புணர்வு: ஒழுக்கச் சீரழிவுகள் என்பது தற்செயலான நிகழ்வுகள் அல்ல, அவை திட்டமிடப்பட்ட சர்வதேச சூழ்ச்சிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஊடாக நம் இல்லங்களுக்குள் நுழையும் 'பாஹிஷா'வின் வடிவங்களை அடையாளம் காணும் அறிவு அவசியம்.

2. சுய ஒழுக்கம் மற்றும் ஈமான்: வெளிக்கட்டுப்பாடுகளை விட, அகக்கட்டுப்பாடே (தக்வா) சிறந்தது. ஈமானை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே, கவர்ச்சிகரமான தீமைகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாக்க முடியும்.

3. ஆக்கப்பூர்வமான சமூகப் பணி: தீமைகளைத் தடுப்பது ஒரு பக்கம் இருக்க, நற்பண்புகளை வளர்ப்பதற்கான மாற்று வழிகளை நாம் உருவாக்க வேண்டும். சிறந்த ஒழுக்க விழுமியங்களை ஒரு பாடத்திட்டமாகவே இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒளிமயமான சமூகத்தை நோக்கி

ஒழுக்கம் என்பது ஒரு சமூகத்தின் உயிரோட்டம். சூரா நூர் வழங்கும் வழிகாட்டுதல்கள், அநாகரிகமான இருளிலிருந்து ஒரு சமூகத்தை மீட்டு ஒளியை நோக்கி இட்டுச்செல்கின்றன. கற்பையும், மானத்தையும், ஒழுக்கத்தையும் பாதுகாப்பது என்பது தனிமனித விவகாரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அஸ்திவாரத்தைப் பாதுகாக்கும் அறப்போர். இறைவன் வகுத்த எல்லைகளைப் பேணி நடப்பதன் மூலமே, ஆளுமைமிக்க, கண்ணியமான மற்றும் ஒளிமயமான ஒரு சமூகத்தை நம்மால் மீட்டெடுக்க முடியும்.

Full Video Podcast Discussion